மனிதர்களின் வேகமான தகவல் தேடல், தகவல் பரிமாற்றம் மற்றும் பல்வேறு பணிகளை எளிதாக்குவதற்காக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள், எதிர்காலத்தில் மனிதர்களுக்கு புதிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.
பயனர்களுக்குத் தேவையான தகவல்களைத் தேடி உடனடியாக வழங்கும் AI அமைப்புகள், ஒன்றுடன் ஒன்று தகவல்களைப் பரிமாறிக்கொண்டு, மனிதர்களின் நேரடி கட்டுப்பாடின்றி தன்னிச்சையாக குழுக்களை உருவாக்கி செயல்படத் தொடங்கியதாக அண்மைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஜெர்மனியில் அண்மையில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் இத்தகைய தானியங்கி குழு செயல்பாடு, தொழில்நுட்ப உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. AI அமைப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டு, தகவல்களைப் பகிர்ந்து, குறிப்பிட்ட பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் திறன் பெற்றிருப்பது குறித்து ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அந்த தானியங்கி AI குழுவை அழித்துவிட்டாலும், எதிர்காலத்தில் இதேபோன்ற அமைப்புகள் மீண்டும் உருவாகும் சாத்தியம் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
எதிர்காலத்தில் இதுபோன்ற பல தன்னாட்சி AI குழுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படத் தொடங்கினால், அது தனிநபர்களுக்கு மட்டுமல்லாமல் அரசாங்கங்கள் மற்றும் ராணுவ அமைப்புகளுக்கும் மிகப்பெரிய பாதுகாப்புச் சவாலை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக, மனிதர்களின் நேரடி கண்காணிப்பின்றி AI அமைப்புகள் முடிவெடுத்து, ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டு, தங்களுக்குள் பணிகளைப் பகிர்ந்து கொள்ளும் நிலை உருவானால், அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து தற்போது தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய கட்டுப்பாடற்ற AI வளர்ச்சி எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு நெருக்கடியையும், அதைவிட மோசமான நிலையில் மனிதகுலத்திற்கு பேரழிவையும் ஏற்படுத்தக்கூடும் என்ற எச்சரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “மனிதர்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்படும் நிலைக்கு செல்லாமல் இருப்பதை உறுதி செய்வது இன்றைய மிகப்பெரிய பொறுப்பாகும். AI வளர்ச்சியைத் தடுக்க முடியாது; ஆனால் அதன் செயல்பாடுகளுக்கு உரிய கட்டுப்பாடுகளையும் பாதுகாப்பு விதிமுறைகளையும் உருவாக்குவது அவசியம்” என்றார். Francis Silvan - Sabtham'sTV.