Sunday, 8 November 2026

மலாக்கா மாநிலத் தேர்தல்:  நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அரசியல் ஸ்திரத்தன்மை நம்பிக்கைக் கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் -

அலோர் காஜார், அக்டோபர் 31-
நாட்டின் மேம்பட்டு வரும் பொருளாதாரச் சூழலும் தற்போதைய அரசியல் ஸ்திரத்தன்மையும், வரும் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறும் 16-வது மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு (பி.எச்) கூடுதல் சாதகமான பலத்தை அளிக்கும் என அக்கூட்டணி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது, அன்னிய முதலீடுகளின் வருகை உட்பட கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் மடானி அரசாங்கம் அடைந்த சாதனைகளை, பிரச்சாரக் காலத்தில் மக்களுக்குச் சிறந்த முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பி.கே.ஆர் தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இன்று இங்குள்ள மாச்சாப் ஜெயா சட்டமன்றத் தொகுதியின் வேட்புமனுத் தாக்கல் மையத்தில் ஊடகங்களைச் சந்தித்த அவர், தேர்தலின் முடிவு இன்னும் திறந்த நிலையில் உள்ளது என்றும், ஒவ்வொரு அரசியல்கூட்டணியும் முன்வைக்கும் திட்டங்கள், முயற்சிகளை மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்திலேயே அது அமையும் என்றும் குறிப்பிட்டார்.

மனிதவள அமைச்சருமான அவர், நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் இயந்திரம் களத்தில் இறங்கி, அரசாங்கத்தின் சாதனைகள், திட்டங்கள், மக்களின் நலனுக்காகச் செயல்படுத்த உத்தேசித்துள்ள நடவடிக்கைகளை தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நமது வெற்றிகள், அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றிய தகவல்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்றும், அவ்வாறு செல்லாவிட்டால் என்ன செய்யப்பட்டுள்ளது என்பது அவர்களுக்குத் தெரியாமல் போய்விடும் என்பதால், அடிமட்ட அளவில் தகவல்களைக் கொண்டு சேர்க்கும் முறையை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, ரமணன், ஃபத்லினா, பி.கே.ஆர் துணைத் தலைவரின் கடமைகளை ஆற்றிவரும் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், மத்திய தலைமைத்துவக் குழு உறுப்பினர் டாக்டர் மஸ்லி மாலிக் ஆகியோர் கினி லிம்மை வேட்புமனுத் தாக்கல் மையத்திற்கு அழைத்து வந்தனர்.

மாச்சாப் ஜெயா தொகுதியில் முக்கோணப் போட்டி நிலவுகிறது. மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளாக நவம்பர் 14-ஆம் தேதியையும், முன் கூட்டிய வாக்களிப்பு நாளாக நவம்பர் 10-ஆம் தேதியையும் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.