Thursday, 24 September 2026

அழகான நேபாளம்… ஒரு பேரிடரின் வலி

அழகான நேபாளம்… மலைகளும், நதிகளும், பசுமையும், அமைதியும் நிறைந்த ஒரு அற்புதமான தேசம்.

The Ten Commandments திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். மோசஸ் தனது கோலை நீட்டியவுடன் கடல் இரண்டாகப் பிரிந்து, மக்கள் நடந்து செல்ல ஒரு பாதை உருவாகும். அந்த சம்பவம் பைபிளில் கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், நாம் வாழும் இந்தக் காலத்திலும் இயற்கை சில நேரங்களில் நம்ப முடியாத காட்சிகளை நம் கண் முன்னே நிகழ்த்துகிறது.

பல பேரிடர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், மலையைத் தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து வந்து, கண் முன்னே நூற்றுக்கணக்கான உயிர்களை அடித்துச் செல்லும் அதிர்ச்சியூட்டும் காட்சிகளைப் பார்க்கும்போது—எதை நம்புவது, எதை நம்பாமல் இருப்பது என்ற பல கேள்விகள் மனதில் எழுகின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நிகழ்ச்சி தயாரிப்பு மற்றும் ஒளிபரப்புப் பணிக்காக காட்மாண்டுவிலிருந்து பொக்கராவுக்கு நான் பயணம் செய்திருக்கிறேன். அந்தப் பயணத்தின் போது நேபாளத்தின் மலைப்பாதைகளையும், மலைகளின் அடிவாரத்தில் ஓடிக்கொண்டிருந்த அழகான நதிகளையும் பார்த்து ரசித்திருக்கிறேன். அந்தப் பயண அனுபவம் இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.

மலைச்சரிவுகளில் அமைந்திருந்த அந்தச் சாலைகளில் பயணிக்கும்போது, வெளியே எட்டிப் பார்த்தால் கீழே பள்ளத்தாக்குகளில் சிறு நதிகள் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடியும்.

அப்போது எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.

“ஏன் இந்தச் சாலைகளை இவ்வளவு உயரத்தில் அமைத்திருக்கிறார்கள்? இந்த அழகான நதிகளின் ஓரமாகப் பயணித்தால் இன்னும் சுகமான அனுபவமாக இருக்குமே?”

ஆனால், இன்று அந்த நினைவுகளைத் திரும்பிப் பார்க்கும்போது, இயற்கையின் சக்தியை நாம் எவ்வளவு குறைவாகவே புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர முடிகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோன்ற இயற்கைப் பேரிடர்கள் நிகழ்ந்திருக்கக்கூடும். ஒரு காலத்தில் தண்ணீர் இருந்த பகுதிகள் இன்று மலைகளாகவும் பள்ளத்தாக்குகளாகவும் மாறியிருக்கலாம்.

சுனாமியின் தாக்கத்தை நாம் வீடியோ காட்சிகளில் பார்த்திருக்கிறோம். அப்போது கடலின் தண்ணீர் கீழிருந்து நிலத்தை நோக்கி வந்து மக்களைத் தாக்கியது.

ஆனால் இந்த முறை… வானமே திறந்தது போல மழை கொட்டியது. மலைகளிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்தது. வானத்திலிருந்து வந்த தண்ணீரே மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது.

இந்த இயற்கையின் கோரத் தாக்கத்திற்கு அழகான நேபாளத்தின் சில பகுதிகள் பலியாகியிருப்பதை நினைக்கும்போது மனம் வேதனைப்படுகிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் மேற்கொண்ட நேபாளப் பயணம் இன்னும் என் நினைவில் ஒரு இனிய அனுபவமாகவே இருக்கிறது.

மலைப்பாதையில் காரை நிறுத்திவிட்டு வெளியே வந்து, குளிர்ந்த காற்றை ரசித்துக்கொண்டே சுடச்சுட ஒரு Green Tea அருந்திய அந்தத் தருணம்… சொல்ல முடியாத ஒரு ரம்யமான உணர்வு.

அந்த அனுபவம் எனக்கு இன்னொரு இடத்தையும் நினைவுபடுத்துகிறது. பாரிஸில் Eiffel Tower-ஐ பார்த்துக்கொண்டே, என் அறையின் பால்கனியில் அமர்ந்து Green Tea அருந்தியபோது கிடைத்த அதே சிலிர்ப்பையும் அமைதியையும் நான் நேபாளத்திலும் உணர்ந்திருக்கிறேன்.

இன்று நேபாளத்தின் சில பகுதிகள் பேரிடரால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் நேபாளத்தின் அழகான பக்கங்கள் இன்னும் பல இருக்கின்றன. வாசிக்கப்படாத பல பக்கங்கள் இருக்கின்றன. காணப்படாத பல அழகுகள் இருக்கின்றன. இன்னும் சொல்லப்படாத பல கதைகள் இருக்கின்றன.

பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் வேதனைக் கதைகளைக் கேட்கும்போது மனம் மிகவும் கனக்கிறது.

உயிர் பிழைத்தவர்களை நம்பிக்கையோடு பார்க்கிறோம். உயிரிழந்தவர்களின் ஆன்மா அமைதியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

மீண்டும் இதுபோன்ற ஒரு பெருந்துயரம் நேபாளத்திலும், உலகின் எந்தப் பகுதியிலும் நிகழக்கூடாது என்று இறைவனை வேண்டுவோம்.

அழகான நேபாளம் மீண்டும் சிரிக்கட்டும்…
மலைகளும் நதிகளும் மீண்டும் அதன் அழகைப் பாடட்டும்…
மக்களின் முகங்களில் மீண்டும் புன்னகை மலரட்டும். Francis Silvan - Sabtham'sTV