Sunday, 8 November 2026

பிரிக்ஃபீல்ட்ஸ் தீபாவளி விற்பனைச் சந்தையின் வரலாறு…

26 October Kuala Lumpur 

ஒரு காலத்தில், லட்சக்கணக்கான தமிழர்களால் கொண்டாடப்படும் தீபாவளிக்கான விற்பனைச் சந்தை, கோலாலம்பூரில் உள்ள லெபோ அம்பாங் பகுதியை மையமாகக் கொண்டிருந்தது.

மறைந்த டான்ஸ்ரீ எம். ஜி. பண்டிதன், தமிழ்நேசனில் நிருபராகப் பணியாற்றிய காலத்தில், தீபாவளி நேரத்தில்தான் லெபோ அம்பாங் பகுதியில் தமிழர்களை அதிக அளவில் காண முடியும் என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். அந்த அளவுக்கு லெபோ அம்பாங், தீபாவளி விற்பனைக்குப் புகழ்பெற்ற இடமாக விளங்கியது.

காலப்போக்கில் விற்பனைச் சந்தை லெபோ அம்பாங் பகுதியிலிருந்து மஸ்ஜித் இந்தியா பகுதிக்கு நகர்ந்தது. தீபாவளி என்றாலே மஸ்ஜித் இந்தியாதான் என்ற நிலை உருவானது. அங்கு ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு, தீபாவளிக்குத் தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. அதேவேளையில், கடைகள் அமைப்பது தொடர்பாகப் பல்வேறு போராட்டங்களும் சர்ச்சைகளும் எழுந்தன.

இதற்கிடையில், மஸ்ஜித் இந்தியா மற்றும் லெபோ அம்பாங் பகுதிகளைப் போலவே, பிரிக்ஃபீல்ட்ஸிலும் தீபாவளிக்கான சிறப்புக் கடைகள் தோன்றத் தொடங்கின. அங்கு மக்களின் வருகையும் அதிகரித்தது.

காலப்போக்கில் மஸ்ஜித் இந்தியா பகுதியில் இருந்த பல கடைகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, இன்று தீபாவளி விற்பனைக்கான முக்கிய மையமாகப் பிரிக்ஃபீல்ட்ஸ் உருவெடுத்துள்ளது.

தீபாவளிக் காலத்தில் மட்டுமே வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கும், கோலாலம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் மக்களுக்கும் பிரிக்ஃபீல்ட்ஸ் வசதியான இடமாக அமைந்துள்ளது. பல்வேறு கடைகள் ஒரே பகுதியில் இருப்பதால், தீபாவளிப் பொருட்களை வாங்குவதற்காகப் பெருமளவில் மக்கள் இங்கு வருகின்றனர்.

பிரிக்ஃபீல்ட்ஸ் உருவான லிட்டில் இந்தியா வரலாறு

பிரிக்ஃபீல்ட்ஸின் வளர்ச்சியில் முக்கிய நிகழ்வாக, அந்தப் பகுதி ‘லிட்டில் இந்தியா’ என அறிவிக்கப்பட்டது.

2009 அக்டோபர் 17ஆம் தேதி பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதி அதிகாரபூர்வமாக ‘லிட்டில் இந்தியா’ என அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 2010 அக்டோபர் 27ஆம் தேதி இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும் இணைந்து லிட்டில் இந்தியா திட்டத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தனர்.

அப்போதைய துணை அமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ எம். சரவணனின் காலகட்டத்தில் இடம்பெற்ற இந்த வரலாற்று நிகழ்வும், லிட்டில் இந்தியா என்ற அடையாளமும் பிரிக்ஃபீல்ட்ஸின் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தின.அதன் பின்னர், ஆண்டுதோறும் தீபாவளி விற்பனைச் சந்தை பிரிக்ஃபீல்ட்ஸை மையமாகக் கொண்டு நடைபெற்று வந்தது.

இந்த ஆண்டின் தீபாவளிச் சந்தையும் புதிய சர்ச்சையும்

இந்த ஆண்டு, கூட்டரசுப் பிரதேச அமைச்சு ஏற்பாட்டில், கோலாலம்பூரில் ஒரு சாலைப் பகுதி சில வாரங்களுக்கு மூடப்பட்டு, விற்பனையாளர்களுக்குக் கடைகள் ஒதுக்கப்பட்டன. அங்கு விற்பனைக் கடைகளுடன் மேடையும் அமைக்கப்பட்டு, சாலைப் பகுதியே தீபாவளிச் சந்தைக்காகப் பயன்படுத்தப்பட்டது.

இதனால் ஜாலான் துன் சம்பந்தன் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துச் சிரமங்கள் ஏற்பட்டபோதிலும், தீபாவளி விற்பனைக்கான ஏற்பாடு என்பதால் மக்கள் அவற்றைப் பொறுத்துக்கொண்டனர்.

ஒவ்வோர் ஆண்டும் வியாபாரிகள் மத்தியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், இந்த ஆண்டு விளம்பரப் பதாகைகளில் ‘தீபாவளி’ என்ற பெயர் சிதைக்கப்பட்டு எழுதப்பட்டிருந்தது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைக் கண்டு டத்தோஸ்ரீ எம். சரவணன் கடும் கண்டனம் தெரிவித்தார். தீபாவளியின் பெயர் இவ்வாறு சிதைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பொதுமக்களிடமும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இறுதியில், கூட்டுறவு அமைச்சு ‘தீபாவளி’ என்பதே சரியான சொல் என்று உறுதிப்படுத்தியது. எதிர்காலத்திலும் தீபாவளி, தீபாவளியாகவே அழைக்கப்பட வேண்டும் என்பதுதான் தமிழர்களின் தலையாய விருப்பம்.

தமிழர்களின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் அடையாளப்படுத்தும் இந்தப் பண்டிகையின் பெயர் எந்தச் சூழலிலும் சிதைக்கப்படக் கூடாது. தீபாவளி என்ற பெயர் அதன் உண்மையான வடிவிலேயே தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு. Sabtham’s TV