பெந்தோங், ஜன,22 -
உலகாய சவால்களை எதிர்கொள்ளவும், இளம் தலைமுறையினரிடையே போட்டித்தன்மையை மேம்படுத்தவும், பன்மொழி ஆளுகை இன்றியமையாதது.
எனவே, மொழியை முன்னிறுத்தி, இனங்களிடையே நீடிக்கும் சர்ச்சைகள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
போட்டித்தன்மை மிக்க வருங்காலத்தை எதிர்கொள்வதற்கான ஆற்றலை இளம் தலைமுறைக்கு உண்டாக்க வேண்டும்.
அதனை விடுத்து, இன்னமும் மொழி அடிப்படையில் இனப்பாகுபாட்டையும், அதனால் சர்ச்சையையும் விடாபிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கக் கூடாது என பிரதமர் அறிவுறுத்தினார்.
அரசு பன்மொழிக் கல்வி அணுகுமுறையைச் செயல்படுத்தி வருகிறது.
அதற்காக, தேசிய மொழியாகவும் நாட்டின் அதிகாரப்படியான மொழியாகவும் விளங்கும் மலாய் மொழியின் நிலையை புறந்தள்ளுவதாகப் பொருள்படாது.
மாறாக தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தி, எல்லா மாணக்கரும் பல்வேறு மொழிகளில் ஆளுகை செலுத்தும் சமமான வாய்ப்பை அரசு ஏற்படுத்தித் தருகிறது என, பிரதமர் விவரித்தார்.
ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை மாணாக்கர் கற்றுக் கொள்வது அவசியம்.
வேலைச் சந்தையில் உள்நாட்டில் மட்டுமல்லாது, ஆசிய வட்டாரத்திலும் உலகாய நிலையிலும் போட்டியைச் சமாளிக்க, பன்மொழி ஆளுகை தேவை.
அறிவியல், கணிதம், இலக்கவியல், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றை, தொடக்கக் கல்வியிலேயே வலியுறுத்தும் அரசு, பன்மொழித் திறனையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
PERTING தேசிய வகை சீனப் பள்ளியில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் டத்தோஸ்ரீ அன்வார், உரையாற்றினார். ADMIN:SABTHAMSTV