Thursday, 16 April 2026

கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான நெருக்கடி முடிவுக்கு வர வேண்டும்.

கோலா லம்பூர், டிசா 22, கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான நெருக்கடி முடிவுக்கு வர வேண்டும். அதற்கான எல்லா நடவடிக்கைகளையும் ஆசியான் உறுதி செய்ய வேண்டும்.

கம்போடிய-தாய்லாந்து நெருக்கடி, அவ்விரு நாடுகளை மட்டும் பாதிக்கவில்லை; மாறாக உலகில் வெற்றி அடைந்த, மிக அமைதியான வட்டார அமைப்பாக நீடிப்பதில், ஆசியான் மீதான நம்பகத்தன்மைக்குப் பரிசோதனையாக அமைந்திருப்பதாக, வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார்.

 

கம்போடிய-தாய்லாந்து நடப்புச் சூழலை விவாதிக்க இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற, ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் சிறப்புக் கூட்டத்தில், அவர் உரையாற்றினார். கோலாலம்பூர் அமைதி உடன்படிக்கையை, கம்போடியாவும் தாய்லாந்தும் முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும் என, அமைச்சர் வலியுறுத்தினார்.

நவீன வரலாற்றில் ஆசியான் எதிர்கொண்டிருக்கும் மருட்டலாகவே, இரு உறுப்புநாடுகளுக்கு இடையிலான இந்த மோதல் கருதப்படுகிறது. பாதுகாப்பு நிலைத்தன்மையின்மை, எல்லை கடந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை எல்லா தரப்புகளும் உணர வேண்டும்.

நெருக்கடியைத் தணித்து, அமைதிக்கான தீர்வுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே நீடிக்கும் எல்லை மோதல்களில் பொதுமக்கள் கொல்லப்படுவது மிக வருத்தமளிப்பதாக,  டத்தோஸ்ரீ முகமட் ஹசான் குறிப்பிட்டார்.Admin-Sabthams TV