கோலாலம்பூர், டிச.29- தென்னிந்திய திரைப்பட முன்னணி நட்சத்திரமான ஜோசப் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகனின் இசை அறிமுகவிழா கோலாலம்பூரில் சுமார் 85,000 மலேசிய ரசிகர்கள் முன்னிலையில் எட்டு மணி நேர இசைவிழாவாக நடந்தது.
சுமார் நான்கு மணிநேரம் தமிழ்நாட்டு கலைஞர்களின் இசை நிகழ்ச்சிக்கு பிறகு இருள் அடைந்த அரங்கத்தில் ஒரு ஒளிப்பிழம்பாக விஜய் மேடையில் தோன்றிய போது, இடிவிழுந்ததைப் போல் அரங்கம் அதிரத் தொடங்கியது.
ஒவ்வொரு முறையும் விஜயின் முகம் அகண்ட திரையில் தோன்றும்போது, விஜய்யின் ரசிகர்கள் ஓங்கிக் குரல் எடுத்து, உற்சாகத்தில் ‘விஜய்! விஜய்!’ என்று அதிர்ந்து போயினர்.
ஒரு பாடலுக்குக் கொஞ்சமாய் விஜய் ஆடியபோது, ரசிகர்கள் இருந்த இடத்திததில் ஆடத் தொடங்கினர். மலேசியாவில், இது போன்ற ரசிகர் கூட்டத்தை உலகின் மிகச்சிறந்த பாப் பாடகரான மைக்கேல் ஜாக்சனுக்கு பின்னர், விஜய் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
வழக்கமாக காற்பந்து போட்டிகளின் போது ரசிகர்களின் கூச்சலை மட்டும் ரசித்த புக்கிட்ஜாலில் தேசிய அரங்கம், இந்த முறை விஜய் ரசிகர்களின்
கொண்டாட்டத்தை பார்த்து ஸ்தம்பித்துப் போனது.
அரங்கில் ஆடிபாடி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த ரசிகர்கள், திரைப்பட துறையிலிருந்து விஜய் விலகுவது ஒரு வேதனையான கனவு என்று குறிப்பிட்டனர்.
சுமார் 40 மில்லியன் ரிங்கிட் வசூல் செய்யப்பட்டதாக புள்ளி விவரங்கள் கூறும் அதே வேளையில் ஜனநாயாகனின் இசை விழா மலேசிய சாதனை புத்தகத்க்தில் இடம்பிடித்து விஜய்யின் விழாவாக நிறைவு பெற்றது.Francis Silvan