GIG ஆலோசக-நடுவர் மன்றத்தைத் தோற்றுவித்தல்; 2026-2035 தேசிய மனிதவள கொள்கையை வரைதல், மனிதவள அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் DATUK SERI R. RAMANAN, அடுத்த ஈராண்டுகளில் செயல்படுத்தவிருக்கும் தலையாயத் திட்டங்கள் அவை. நாட்டின் வேலைச் சூழலியலை வலுப்படுத்த அவ்விரு விவகாரங்களையும் அமைச்சர் நுண்ணோக்குகிறார். GIG - கறங்குப் பணித் துறையில் நிலவும் சர்ச்சைகளை நியாயமாகவும், விவேகமாகவும் தீர்க்க, GIG ஆலோசக-நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும் என அவர் கருதுகிறார். அதேவேளை, தொழிலாளர் நலனை உறுதி செய்வதில், குறிப்பாக, பாதுகாப்பு, வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என அவர் கூறினார். மனித வள அமைச்சு, இன-சமய-பின்புலம், வேலைத் துறை பாடுபாடின்றி, எல்லா மலேசியத் தொழிலாளர்களுக்காகவும் இயங்கும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
இந்தியர்களிடையே நிலவும் வேலை சிக்கலுக்கு உடனடியாக தீர்வு எட்டப்படும் எனும் உத்தரவாதத்தை மனிதவள அமைச்சராகத் தமது பணியை அதிகாரப்படியாகத் தொடங்கிய இன்றைய முதல் நாளில், DATUK SERI RAMANAN முன்வைத்தார். இந்திய சமூகத்தினர் எதிர்நோக்கும் வேலைவாய்ப்பு குறைபாடுகள் குறித்து தீவிர கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
வேலை தேடும் இளைஞர்கள், B40 குடும்பங்களைச் சேர்ந்தோர் மற்றும் திறன் மேம்பாடு தேவைப்படுவோர் ஆகியோருக்கான சிறப்பு திட்டங்கள் குறித்து தமதமைச்சு கலந்தாலோசிக்கும் என DATUK SERI RAMANAN கூறினார்.
தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப திறன் பயிற்சி வழங்குதல், வேலைவாய்ப்pu உருவாக்கத்தில் தனியார் துறையின் பங்களிப்பை அதிகரித்தல், ஆகிய கூறுகளுக்கும் அவர் முன்னுரிமை அளிக்கவுள்ளார்.